Thursday, 23 March 2017

கண்களையும் தாக்குமா சிக்குன்குன்யா?

கண்களையும் தாக்குமா சிக்குன்குன்யா?


கண் எரிச்சல், சிவந்து போதல், பார்வை மங்கின உணர்வு போன்றவற்றால் அவதிப்பட்ட சிலரைப் பரிசோதித்தபோது,
அவர்களுக்கு சிக்குன்குன்யா இருப்பது சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திடீர் திடீரென மாறும் பருவநிலைகளால் தமிழகத்தில் மீண்டும் சிக்குன்குன்யா பீதி! தலைவலியா, காய்ச்சலா, கை, கால் வலியா... சிக்குன்குன்யாவாக இருக்குமோ என மக்கள் பயந்து போயிருக்கிற நிலையில், கண்களில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களும் சிக்குன்குன்யாவின் அறிகுறியாக இருக்கலாம் என்பது புதிய பயம்.

ஏடிஸ் எனப்படுகிற கொசுக்கள் கடிப்பதால் உண்டாகிற வைரஸ் காய்ச்சலே சிக்குன்குன்யா. இந்த வகைக் கொசுக்கள் புதுத்தண்ணீரில் பல்கிப் பெருகக்கூடியவை. இவற்றின் இலக்கு மனிதர்கள்! சிக்குன் குன்யா தாக்கிய ஒருவரிடமிருந்து, இன்னொருவருக்கு இந்நோய் தொற்றுவதில்லை. அதாவது இது ஒட்டிப் பரவக்கூடிய தன்மை கொண்டதல்ல. ஆனால், இந்நோய் வந்த நபரைக் கடிக்கிற கொசு, அடுத்து இன்னொரு நபரைக் கடிக்கிறபோது, முதல் நபரிலிருந்து அடுத்தவருக்கும் நோய்க்கிருமி கடத்தப்படுகிறது.

நோய் வந்தவர்களுக்கு அதிக காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் சகஜம். கண் எரிச்சல், சிவந்து போதல், பார்வை மங்கின உணர்வு போன்றவற்றால் அவதிப்பட்ட சிலரைப் பரிசோதித்தபோது, அவர்களுக்கும் சிக்குன்குன்யா இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கண்களில் உண்டாகிற மேற்சொன்ன அறிகுறிகளை ‘மெட்ராஸ் ஐ’ எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம், அது சிக்குன்குன்யாவாகவும் இருக்கலாம் என்கிற எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது.கண்களையும் தாக்குமா சிக்குன்குன்யா? விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதியிடம் கேட்டோம்
‘‘சிக்குன் குன்யாவுக்கு காரணமான வைரஸ் மட்டுமில்லாம, ரூபெல்லா மாதிரியான மத்த வைரஸ் தொற்றுகள் சிலதும் மனிதர்களோட உடல் முழுக்க பரவலான பாதிப்பை உண்டாக்கும். பொதுவா பாக்டீரியா தொற்று, காய்ச்சலையோ, உடல்வலியையோ மட்டும் கொடுக்கும். ஆனா, வைரஸ் தொற்று உடல் முழுக்க கடுமையான பாதிப்பை உண்டாக்கிற அளவுக்குத் தீவிரமானது. உதாரணத்துக்கு ரூபெல்லா. கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய் தாக்குகிறபோது, அது கருவுல உள்ள குழந்தையோட இதயம், மூளை, கண்கள், காதுகள்னு பல உறுப்புகளையும் பாதிக்கும். அதாவது அந்தப் பாதிப்புல கண்களும் அடக்கம். அதுக்காக பிறந்த குழந்தையோட கண்கள் பாதிக்கப்பட்டா, அதுக்கு ரூபெல்லா மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது.

சிக்குன்குன்யா வைரஸும் கிட்டத்தட்ட அப்படித்தான். இந்த நோய்க்குக் காரணமான வைரஸ் கண்களைப் பாதிக்கிறதுங்கிறது ரொம்ப ரொம்பக் கம்மி. உலகளவுலயே இந்தப் பாதிப்பு சதவிகிதம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுலதான் இருக்கு. கண்கள்ல அக்யுவெஸ் ஹுயூமர் சொல்லக்கூடிய ஒரு திரவம் இருக்கு. அதை பி.சி.ஆர் முறைல டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும். நம்மளோட மரபணுக்கள்ல டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. புரதங்கள் இருக்கு. சிக்குன்குன்யா வைரஸுக்கு வெறும் ஆர்.என்.ஏ. மட்டும்தான் இருக்கும்.

 கண்கள்லேர்ந்து எடுக்கப்படற திரவத்தை பி.சி.ஆர். டெஸ்ட் பண்ணி, அதுல இந்த ஆர்.என்.ஏ. இருக்கானு தெரிஞ்சுக்கிறது மூலமா கண்கள்ல சிக்குன்குன்யா பாதிப்பு இருக்காங்கிறதை உறுதி செய்யலாம். அபூர்வமான ஒரு விஷயத்தை நினைச்சு மக்கள் இந்தளவுக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை’’ என்கிற டாக்டர் வசுமதி, கண்களில் திடீரென உண்டாகிற எந்த அசாதாரண மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக கண் மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.
 ஆர்.வைதேகி

No comments:

Post a Comment